தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே கலக மூட்டும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது. கருணாநிதி தெரிவித்த கருத்தைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன்.
இளைஞன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும் போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? என்று பேசி இருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியின் மேற்படி பேச்சு 6.12.2010 முரசொலியில் வெளியாகி இருக்கிறது. இதே போன்று, ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகரமாக ஆக்குகின்றன? என்று தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, அதற்கு, ஒரு சில பத்திரிகைகளும், ஒரு சில எதிர்க்கட்சிக்காரர்களும் தான் பூதாகரமாக இந்தப்பிரச்சினையை ஆக்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு போய் விட்டதைப் போலவும், அந்தத் தொகையை ஒரு சிலர் பங்கிட்டுக்கொண்டதைப் போலவும், அதற்காக பாராளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். கருணாநிதியின் மேற்படி கேள்வி பதில் 7.12.2010 அன்று முரசொலியில் வெளியாகியிருக்கிறது.
ஆனால், நேற்றைய அறிக்கையில், இளைஞன் திரைப்பட விழாவில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஊழல் செய்திருக்க முடியுமா? என்று தான் பேசியதாகவும், இதை வைத்து தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நான் சிண்டு முடியப்பார்ப்பதாகவும் கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார்.
மொத்தத்தில், காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசை கண்டு அஞ்சுகின்ற காலம் வந்துவிட்டது என்பது அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment